திங்கள், 26 மே, 2014

• ஒரு இந்தியக்கனவு – பிரதமர் மோடி



·        கடந்த 15 மாத மோடியின் கனவு இன்று நனவாகிறது. இந்தியாவின் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியான பாரதிய ஜனதா தனது தலைவர்களில் ஒருவரை பிரதமராக்கி அழகு பார்க்கிறது. 4062 நாட்கள் குஜராத் மாநிலத்தை ஆண்டவரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்தியாவை ஆளும் பெரும்பொறுப்பை ஏற்கிறார். ஒரு பிரதமராக ஆவதற்கு இதுவரை யாரும் செய்யாத அளவில் மிகநீண்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார் மோடி. ஒரே நாளில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல் பிரதேசத்தில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு, தொடர்ந்து அஸ்ஸாமில் ஒரு கூட்டத்தில் உரையாற்றி மாலையில் தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமளவுக்கு மனோபலமும், உடல்பலமும் அவருக்கிருந்தது. எனவேதான் இது பாஜக வின் வெற்றியல்ல, மோடியின் வெற்றி என்பதை அதன் மூத்த தலைவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். கடின உழைப்பு வீண்போகவில்லை. 300 எம்பிக்களைத்தாருங்கள், 60 மாதங்களில் இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன் என்கிற அவரின் உறுதிமொழியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அந்த உறுதிமொழி காப்பாற்றப்படுமா என்கிற கேள்வியும் எழாமலில்லை. 


அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறியாதவர்களல்ல இந்திய மக்கள். இந்தியப் பாராளுமன்றங்களிலேயே மிகக்குறைந்த சதவிகித ஓட்டுகளை(31%) மட்டுமே பெற்றும் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியவர்கள் என்கிற ஒரு பெருமையையும் இந்த அரசு பெறுகிறது. இது எதைக்காட்டுகிறது என்றால், இந்தத் தீர்ப்பு சராசரிக்கு மேலான இடங்களைப் பெற்றுத்தந்தபோதும், பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு பாஜக இல்லை என்பதை அக்கட்சி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே. ஆட்சியமைக்கிற ஒரு வாய்ப்பு தன்னை, தன் கட்சியை நிலைப்படுத்தப்போதும் என்கிற மோடியின் தீவிரமான எண்ணம்தான் இனிமேல் நடக்கவிருக்கிற நிகழ்வுகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைய இருக்கிறது.
·        பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மோடியின் மீதான குற்றப்பத்திரிக்கைகள் எல்லாத்தரப்பிலிருந்தும் வாசிக்க்ப்பட்டுவிட்டன. நரபலி நாயகன்என்ற கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டவர். குஜராத் ஒன்றும் தமிழகம் அளவுக்கு முன்னேறிவிடவில்லை என்கிற ஒப்பீடுகளுக்கும் குறைவில்லை. எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசி ஆராயப்பட்டு, குஜராத்தின் வளர்ச்சி தற்காலிகமானதுதான் என்றும் போலியானது என்றும் விவாதங்கள் நடைபெற்றன. தேனீர் வியாபாரி, திருமணமானதையே மறைத்தவர் என்று தனிநபர் தாக்குதல்களுக்கும் குறைவில்லை. என்றாலும் அவர் வெற்றி பெற்றார். ஒரு பிரதமராக இந்தியாவின் எதிர்கால வளர்ச்சித்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வருவதற்கு முன்னால், மோடி வென்றதாக அறிவிக்கப்பட்ட 16 மே 2014 முதல் பதவியேற்கவுள்ள இன்றுவரை நிகழ்ந்த சம்பவங்களை ஒருமுறை ரிவ்யூ செய்துவிடலாம்.



·        வெற்றிச் செய்தியோடு அம்மாவைச்சந்தித்தார், மூத்த தலைவர்களைச் சந்தித்தார், வாரணாசி சென்று கங்கைக்கு வழிபாடு செய்தார்- கங்கை என் தாய் அவள் அழைத்ததனாலேயே இங்கு வந்திருக்கிறேன் என்று பிரச்சாரத்தின்போது சொல்லியிருந்தார்- அதன்பிறகு மந்திரிசபைக்கான ஆலோசனை தொடங்கியது. யாரெல்லாம் அமைச்சர்களாவார்கள் என்கிற அனுமானங்கள் நாடெங்கும் அலையடித்தது. அது ஓயும் முன்பே பதவியேற்பு விழா விருந்தினர் பட்டியல் வெளியாகி எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பட்டியல் இதுதான், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சால், நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ரலா, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பங்களாதேஷ் பாராளுமன்ற சபாநாயகர் சிரின் சௌத்ரி, மாலத்தீவின் பிரதமர் அப்துல்லா யமீன், மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா, பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் இலங்கையின் மகிந்தா ராஜபக்‌ஷே. இந்தியாவின் எல்லையோர நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது என்பது ஒன்றும் வழக்கத்திற்குமாறான செய்கையல்ல என்றபோதும் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியவரும், ஐ.நா வின் கண்டனங்களுக்கும், அறிக்கைகளுக்கும் ஒருபோதும் செவிசாய்க்காதவருமான ராஜபக்‌ஷே அழைக்கப்பட்டிருப்பதை தமிழர்களால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள இயலாதுதான். மோடியுடைய அன்புக்குப்பாத்திரமான வை.கோ வால் கூட இந்தமுடிவை மாற்றமுடியாமல்போனது. மோடியோடு கைகோர்த்து, தோற்றாலும் டெல்லிக்கு நேரில் சென்று மோடியை வாழ்த்தி வந்தவர், இப்போது கறுப்புக்கொடியோடு டெல்லி வீதிகளில் காத்திருக்கிறார். வோட்டுப்போடாதவர்கள் என்றாலும் தமிழர்களும் இந்திய மைந்தர்களே, ஒரு பிரதமர் என்பவர் ஓட்டளிக்காதவர்களுக்கும் சேர்த்தே பிரதமர்என்கிற கம்யூனிஸ்ட்டுகளின் விளக்கமும் கோரிக்கையும்கூட எடுபடவில்லை. தமிழக முதல்வர், அதை எதிர்த்து அனுப்பிய கடிதத்திற்கும் எந்த விளைவுமில்லை. 


ஆனால் மோடி இதையெல்லாம் அறியாதவரல்ல, மோடியின் பிரச்சாரத்தின்போது பம்பாய் மீனவன் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான், கேரள மீனவன் இத்தாலியனால் கொல்லப்படுகிறான், தமிழக மீனவன் இலங்கை அரசால் கொல்லப்படுகிறான், இந்தக் கையாலாகாத இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது, ஆனால் அமையவிருக்கிற மோடியின் அரசு அப்படி நிச்சயமாக வேடிக்கை பார்க்காது என்று தமிழக மேடைகளில் முழங்கியவர் அவர். நிச்சயம் இந்த அழைப்பில் அவருக்கு

உடன்பாடு இருக்காது என்று நம்புவோம். அதே சமயம் நல்லுறவின்மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பிய அமைதியான வாழ்வைப் பெற்றுத்தரும் எண்ணத்தோடும் அவர் அழைக்கப்பட்டிருக்கலாம். அரசியல் மேடையில் யாருக்கும் முன்னுரிமை வழங்காமல் தனது பாதையில்,தான் மட்டுமே தீர்மானித்த பாதையில் சென்று வெற்றி பெற்றிருக்கிற மோடியின் முன்தீர்மானங்களை அத்வானியே அறியமுடியாதபோது, நமக்கெல்லாம் புரிந்துகொள்ளச் சாத்தியமில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். 10 வருடங்களாய் நம் நாட்டைப் பிடித்திருந்த அசுர சக்தியை இப்போதுதான் அகற்றியிருக்கிறோம். கொண்டாடப்பட வேண்டிய இந்த தருணத்தைக் கொண்டாடுவோம். காத்திருப்போம், நல்லது நடக்கும், நல்லதே நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக